நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் பலி
வட-மத்திய ஆபிரிக்க நாடான நைஜீரியாவின்(Nigeria) ஜோஸ் நகரில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பாடசாலையின் 2 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது நேற்று(12.07.2024) இடம்பெற்றுள்ளது.
மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை இடிப்பாடுகளில் இருந்து உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலவச மருத்துவ சிகிச்சை
கட்டிடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களில் 22 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்றும், 132 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |