படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்(Aiyathurai Nadesan) 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
யாழ்ப்பாணம்(Jaffna) பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(31.05.2024) இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு உருவப்படத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடரேற்றபட்டுள்ளது.
தொடர்ந்து ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (31.05.2024) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில்(Batticaloa) படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (31.05.2024) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றுள்ளது.
காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரத்தினம், இ. பிரசன்னா, இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமஹே, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு(Mullaitivu) ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (31.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களால் சுடரேற்றி மலர்தூவி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2004 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதியன்று தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பில் வீதியில் வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையிலும் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை கடற்கரை பகுதியில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வில், ஐயாத்துரை நடேசனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் சேவை தொடர்பில் சிறப்புரையும் நடைபெற்றுள்ளது.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் முதன்முறையாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |