மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக வரவு - செலவுத் திட்டம் வரை காத்திருக்க வேண்டுமா! அரசிடம் சஜித் கேள்வி
திறைசேரியில் பணம் நிரம்பி வழிகின்றது என்று பெருமையடித்துக்கொள்ளும் அரசு, நாட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக வரவு - செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அடக்குமுறைச் சட்டங்கள்
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தற்போதைய அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் 220 இலட்சம் மக்களும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, ஸ்தம்பித்துப்போன அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் திட்டமிட்டு மீறப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து வீதியில் இறங்கிக் குரல் கொடுக்கும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுத்தல் என்ற போர்வையில் அரசு புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது.
அதேபோன்று, நாட்டின் மகா சங்கத்தினரையும் பௌத்த துறவிகளின் காவி உடையையும் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் இழிவுபடுத்தும் அவல நிலையை இந்த அரசு தாராளமாக அனுமதித்துள்ளது.
கடும் பாதுகாப்பற்ற நிலை
இன்று நாட்டில் வறுமைக்கோடு அதிகரித்துள்ளதோடு, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற பெறுமதிமிக்க தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் அவல நிலை தொடர்கின்றது.
இலவச சுகாதாரச் சேவையைப் பெற வேண்டிய 220 இலட்சம் பொதுமக்களும் கடும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நபர் மாதத்துக்கு வாழ்வதற்கு 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபா போதுமானது என அரசு கூறுவது எந்தவித அறிவியல் பூர்வமான தரவுகளும் அற்ற முட்டாள்தனமான கூற்றாகும்.

அரசுக்கு எளிய மக்கள் மீது எந்தவித அக்கறையும் கிடையாது. அன்று தொழிலாளர்களுக்காக முழங்கிய ஜே.வி.பியினர், இன்று மக்களிடம் இலஞ்சம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பயங்கரவாதி யார் என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பது சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சிக்கே வழிவகுக்கும் என சர்வதேச அமைப்புகளும் கடுமையாக எச்சரித்துள்ளன.
எனவே, மக்களை இந்த விவரிக்க முடியாத துன்புறுத்தல்களில் இருந்து மீட்டெடுக்கப் பலமான மாற்று அரசு என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri