யாருடைய கனவு நிறைவேறும்! இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும் ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ்
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் அணி தெரிவாகியுள்ளது.
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று(14.12.2022) இரவு நடைபெற்றது.
இரண்டாவது அரை இறுதிப் போட்டி
இந்த இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மொராக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை பிரான்ஸ் அணி வீழ்த்தியது.
இதற்கமைய 4 ஆவது தடவையாக FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியிலும், 7ஆவது தடவையாக அரை இறுதி போட்டியிலும் பிரான்ஸ் விளையாடுகின்றது.
60 வருடங்களின் பின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் இம்முறை பிரான்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
இத்தாலி (1934, 1938), பிரேஸில் (1958, 1962) ஆகிய இரண்டு நாடுகளே உலகக் கிண்ணத்தை அடுத்தடுத்த இரண்டு அத்தியாயங்களில் வென்றிருந்தன.
இந்நிலையில் பிரான்ஸ் தனது முதல் 3 முயற்சிகளில் (1958, 1982, 1986) தோல்வி அடைந்தது. இதேவேளை கடைசியாக விளையாடிய 3 சந்தர்ப்பங்களில் (1998, 2006, 2018) பிரான்ஸ் வெற்றிபெற்றதுடன் 1998இலும், 2018இலும் உலக சாம்பியனாகியிருந்தது.
இம்முறையும் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் பிரான்ஸ் அணி தீவிரமாக செயற்படுகின்றது.
தமக்கென்று ஒரு இலட்சியத்துடன் இரு அணிகள்
இதேவேளை முதலாவது அரை இறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி ஆர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
2022 உலகக் கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் என ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
தனது இறுதி உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் உலகக் கிண்ணத்தை வென்றுவிட வேண்டும் எனும் நோக்கத்தில் மெஸ்ஸி தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் வேகம், விவேகம், சிறந்த பந்துபரிமாற்றம் ஆகியவை கலந்த வியூகங்களுடன் பிரான்ஸ் அணியினர் விளையாடிவரும் அதேவேளை, தமது அணி தலைவரும் நட்சத்திர வீரருமான மெஸ்சியின் கனவை நனவாக்கும் நோக்குடன் இறுதி போட்டியில் ஆர்ஜென்டினா அணி களமிறங்கவுள்ளது.
இவ்வாறு தமக்கென்று ஒரு இலட்சியத்துடன் ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டி மற்றைய போட்டிகளை விட வியத்தகு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.