ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் சிக்கலில்! அமைச்சர் கடும் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசியல் இலாபங்களுக்காகப் போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் விசாரணைகள் அதன் போக்கில் நேர்மையாக முன்னோக்கி நகரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் நேர்மையான முறையில் நகரும்
இதன்போது, சி.ஐ.டி. விசாரணைகளுக்குத் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் நளிந்த மேலும் தெரிவிக்கையில்,
"குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய சுயாதீன விசாரணைகளுக்கு எவரேனும் இடையூறு விளைவிக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்துகொண்டாலோ, அல்லது அது குறித்து உண்மைக்குப் புறம்பான போலித் தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட்டாலோ, அது குறித்துத் தகுந்த சான்றுகளுடன் நீதிமன்றத்துக்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அதன் பின்னர், சட்டத்தை மீறிய அத்தகைய நபர்களுக்கு எதிராக நீதிமன்றமே தகுந்த உத்தியோகபூர்வ தீர்மானங்களை எடுக்கும். நாட்டில் ஏதேனும் முக்கிய ஊழல் அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடையும் போது, திட்டமிட்ட சில போராட்டங்கள் மூலம் பொதுமக்களின் அவதானத்தை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு தவறான கலாசாரம் கடந்த காலங்களில் வளர்ந்து வந்துள்ளது.
இத்தகைய திசைதிருப்பல் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் அனைத்தும் மிக விரைவாக இறுதி இலக்கை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தூண்டுதலால் நடத்தப்படும் தற்காலிகப் போராட்டங்கள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிடுகையில்,
"வெறும் 12 அல்லது 18 பேர் கொண்ட சிறிய குழுக்களை வீதிகளில் அமர்த்தி, கூச்சலிட்டுப் போராடுவதனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டபூர்வ விசாரணைகளுக்கு எந்தவொரு பாதிப்போ அல்லது தடைகளோ எற்படப் போவதில்லை.
எமது அரசின் கீழ் எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, சட்டத்தின்படி விசாரணைகள் சரியான முறையில் நேர்மையாக முன்னோக்கி நகரும் என்பதை நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் உறுதி கூறுகின்றோம்" என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan