புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரிடம் 2மணிநேர விசாரணை
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலன் நேற்று (28.11.2026) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் 28ஆம் திகதி காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் இறந்தவர்களின் நினைவாகப் படங்கள் வைக்கப்பட்டமை தொடர்பிலும், குறித்த இடம் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி என்பதால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாகத் தெரிவித்து அழைக்கப்பட்டதாகவும் தவிசாளர் வே. கரிகாலன் தெரிவித்துள்ளார்.
ஏற்பாட்டு குழுவினருடன் முரண்பாடு
இதற்கமைய நேற்று பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பேருந்து நிலையப் பகுதியில் இறந்தவர்களுக்கான நினைவஞ்சலி செலுத்துவதற்கு எவ்வாறு இடம் வழங்கப்பட்டது எனப் பொலிஸார் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
இதற்கு குறித்த பேருந்து நிலையம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குச் சொந்தமானது எனவும், அந்த இடத்தில் நினைவஞ்சலி செலுத்துவதற்கு பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான அனுமதியை வழங்குவதற்கான அதிகாரம் பிரதேச சபைக்கு இருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக வே. கரிகாலன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயத்தில் பொலிஸார் ஏற்பாட்டு குழுவினருடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.