திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம்: நீதிமன்றத்தில் CIDயினர் வெளியிட்ட தகவல்
திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, போலியான மின்னஞ்சல் ஊடாக மோசடியான முறையில் பிறிதொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான தொழில்நுட்பக்குழுவின் அறிக்கை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட கணினித்தரவுகள்
இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இந்த விசாரணை தொடர்பாக கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் (Terabyte அல்லது TB) கணினித்தரவுகளை கொண்ட வன்வட்டுகள் (Hard Disk Drive - HDD) மேலதிக விசாரணைக்காக கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, முந்தைய வழக்கில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையில் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக்குழுவிற்கு, இந்த விசாரணை தொடர்பாக பொதுக்கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத்தளத்தின் நகல்களை வழங்குமாறும் நீதிமன்றம் கோரப்பட்டிருந்தது.
திறைசேரி தொடர்பான 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி காணாமல்போனது குறித்து ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்ப விசாரணைக் குழுவை நிதி அமைச்சு நியமித்துள்ளது.
அதன்படி, இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து டிசம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.