மனைவி - மகன்கள் பெயரில் 180 மில்லியன் பெறுமதியான சொத்து சேர்த்த நபர்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
பெருந்தொகையான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பத்தல ஹீன்கடயா என அழைக்கப்படும் நபரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 180 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.
சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பாரிய மோசடிகள்..
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், தம்புத்தேகம, கிராவல்வத்தை மற்றும் மிதெனிய ஆகிய பகுதிகளில் சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட காணிகள், கட்டடங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட எட்டு சொத்துக்களை இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரின் இரண்டாவது மகனின் பெயரில் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர ஜீப் வண்டி ஒன்றும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மகனுக்கு எதிராக ஏற்கனவே போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளதுடன், சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியே இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், அந்த ஜீப் வண்டியும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.