மர்ம நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சலே - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வைத்தியர்கள்
நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
அவரது உடல்நிலை தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், நேற்றும் பணிப்பாளர் நீதிமன்றத்தில் சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை. மேலும் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளானாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வைத்திய குழு ஒன்றையும் நீதிமன்றம் நியமித்திருந்தது.
நோய் கண்டறிதல் அறிக்கை
எனினும், இந்த வைத்திய குழுவிற்கு அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான நோய் கண்டறிதல் உள்ளிட்ட அறிக்கைகளை வைத்தியசாலை பணிப்பாளர் அனுப்பி வைக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைக்குத் தொடர்புடைய வகையில் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் இருக்கும் சந்தேகநபரான சுரேஷ் சலே, விசாரணைகளை முழுமையாக முடக்கிவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வெடுத்து வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.