இலங்கைக்கு எதிராக தீர்ப்பளித்துள்ள ஐ.நா தீர்ப்பாயத்தின் 17 நீதிபதிகள்!
இலங்கையில் சித்திரவதைக்குள்ளான முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் தீர்ப்பாயத்தின் 17 நீதிபதிகளும், இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளனர்.
இத்தீர்ப்பு இன்றைய தினம் (21.04.2023) வழங்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய முன்னாள் உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்திற்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், இலங்கை பொலிஸாரால் ஒரு மாத காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்கள்
இதன்போது அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளை, 17 முன்னணி சர்வதேச நீதிபதிகள் ஜெனீவாவில் எடுத்துக் கொண்டு வாதாடியுள்ளனர். இதன்போது இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்துள்ளனர்.
அத்துடன், மனுதாரரின் சித்திரவதைகள் சுவிட்சர்லாந்து வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கியமை, மின்சார அதிர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மருத்துவக்குழுவினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்க வேண்டும்
இந்தநிலையில், அவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவத்திற்குக் காரணமான பொலிஸாரை சுதந்திரமாகவும் முழுமையாகவும் விசாரித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கைக்கு, ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது போன்ற நடத்தை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம், அதன் சட்டங்களை மாற்ற வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.