விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் விபரங்களை வெளியிடுவது குறித்து பொலிஸார் அச்சம்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவது அந்த அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப ஊக்குவிக்கும் என பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடி உயிரிழந்த மலையகத் தமிழ் மக்களின் பெயர் பட்டியல் அடங்கிய கட்டுரைத் தொடர்பாக சுயாதீன ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியபோது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச அமைப்பு கண்டனம்
சுயாதீன ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத்தை, நுவரெலியா பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம்(06.04.2023) அழைத்து, இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மலையகத் தமிழர்களின் தேசியத்தை அங்கீகரித்து அவர்களுக்கு காணி உரிமை வழங்கக் கோரி கொழும்பில் கிதுசர குழுவினர் போராட்டம் நடத்திய தினத்தன்று, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்னாள் நாடாளுமன்ற ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) ஊடகவியலாளரை வரவழைத்தமை அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என உலகளவில் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பிற்காக செயற்படும் சர்வதேச அமைப்பு கண்டித்துள்ளது.
ஊடகவியலாளரின் பாதுகாப்பு குறித்த கேள்விகள்
இது தொடர்பில் டப்ளினை தளமாகக் கொண்ட Frontline Defenders அமைப்பு,“இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் அது தொடர்பான வழிமுறைகள் வரலாற்று ரீதியாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இராமச்சந்திரன் சனத்தை CTIDற்கு அழைத்தமை அவரது பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
மனித உரிமைப் பாதுகாவலர்கள், அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன.
இலங்கையில் வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம்
மற்றும் காணி உரிமைக்கான கோரிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டமைக்காக
இராமச்சந்திரன் சனத் குறிவைக்கப்பட்டு அவதானிக்கப்பட்டார்.
பெப்ரவரி 2021இல் ஒரு ஊதிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பின்னர், அவர் துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார்.
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் அடையாளம் தெரியாதநபர்கள் 2021 மார்ச் மற்றும் மே மாதங்களில் அவரது வீட்டிற்குச் சென்று அவரது இருப்பிடம் மற்றும் செயற்பாடுகள் குறித்து விசாரித்துள்ளனர்.
மனித உரிமை ஆர்வலரான சனத் இந்த துன்புறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் 2021 மே 25 பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என Frontline Defenders கூறியுள்ளது.
பொலிஸாரின் அச்சுறுத்தல் பேச்சு
இராமச்சந்திரன் சனத்தை அழைப்பதற்கு வழிவகுத்த ஊடக செய்தி குறித்து கேள்வி எழுப்பிய CTID அதிகாரிகள், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது, அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் போராடுவதற்கும் தனிநபர்களிடையே சிந்தனையை உருவாக்கும் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தாம் தெரிவித்த தகவல்கள் வேறொரு இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் தெரிவித்த ஊடகவியலாளர் சனத், ஏனைய ஊடகங்கள் இன்னமும் முன்னாள் புலி உறுப்பினர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியதாக கூறப்படுகின்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மலையகத் தமிழர்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக தன்னைக் கைது செய்ய நேரிடும் என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எச்சரித்ததாகக் கூறும் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத், பொலிஸாரின் அச்சுறுத்தல் பேச்சு சுதந்திரத்திற்கு தடையாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
