தமிழின படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு அழைப்பு
தமிழின படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற உள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (12.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிதிர்க்கடன்
குறிப்பாக இம்முறையும் இரண்டாவது ஆண்டாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்கின்ற நிகழ்வை முன்னெடுப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தங்களுடைய உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்ய விரும்புகின்ற உறவுகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி காலை 07:00 மணி முதல் 09:30 மணி வரை கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே பிதிர்க்கடன் நிறைவேற்றலாம்.
இதற்காக மக்கள் எந்த ஒரு பொருட்களையும் எடுத்துவரத் தேவையில்லை எனவும் தாங்கள் தங்களுடைய உயிரிழந்த உறவுகளின் பெயருடன் வருகை தந்து அவர்களுடைய பெயரை கூறி விசேடமாக தமிழ் மொழி மூலமாக பிதிக்கடன்களை மேற்கொள்ளலாம்.
மேலும், இதனைத்தொடர்ந்து 10:30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு
முற்றத்தில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் அழைப்பு
விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |