போதைப்பொருள் கடத்தல் விவகாரம் : சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட பெருமளவான சொத்துக்கள்
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு சொந்தமான 100 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சேகரிக்கப்பட்ட சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி இந்த சொத்துக்கள் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குறித்த சொத்துக்களை பெற்ற விதத்தை வெளியிடத் தவறியதால், பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஒழுக்காற்று பிரச்சினை
இதன்படி காலி கஹதுடுவ முனவலேவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு, சொகுசு சிற்றூந்து இரண்டு காணிகள் மற்றும் கிரிவத்துடுவையில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடம் என்பனவே பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சொத்துக்களின் உரிமையாளர் என நம்பப்படும் கைதி, ஒழுக்காற்று பிரச்சினை காரணமாக பணி இடைநிறுத்தம் செய்யப்படுவதற்கு முன்னர் இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார்.
பின்னர், கொத்தனார் வேலை செய்துகொண்டே போதைப்பொருட்களை கடத்தி, குறுகிய காலத்தில் இந்த சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



