திருகோணமலையில் சிறுமியைப் பாலியல் சீண்டல் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை!
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் 16 வயதுக்குக் குறைந்த சிறுமியைப் பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் நேற்று(20.11.2026) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் 16 வயதுக்குக் குறைந்த சிறுமியை சட்டரீதியான பாதுகாப்பிலிருந்து அழைத்துச் சென்று, அவரைப் பாரதூரமான முறையில் பாலியல் சீண்டல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டு
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தாயிப் நகர் பகுதியைச் சேர்ந்த ரஜப் நாகூர் தம்பி (53 வயது) என்பவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தண்டனைச் சட்டக்கோவையின் 354ஆம் பிரிவின் கீழ் சட்டரீதியான பாதுகாப்பிலிருந்து சிறுமியை அழைத்துச் சென்றமை தொடர்பான முதலாவது குற்றச்சாட்டுக்கு 5,000 ரூபாய் அபராதமும், இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நஷ்டஈடு
அதேவேளை, தண்டனைச் சட்டக்கோவையின் 365(2)(ஆ) பிரிவின் கீழ் பாரதூரமான பாலியல் சீண்டல் செய்தமை தொடர்பான இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10,000 ரூபாய் அபராதமும், 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை திருகோணமலை மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணிகளான செஹான் முஸ்தபா மற்றும் செஷன் மஹ்ரூப் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.