மூதூரில் 1,500 கிலோகிராம் அழுகிய மீன்கள் மீட்பு- தீவிரப்படுத்தப்படும் விசாரணை
மூதூர் - இறால்குழி பகுதியில் கருவாடு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய மீன்கள் சுகாதார அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை இன்று(05.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட மீன்கள், புழுக்கள் மொய்த்த நிலையில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதால் உடனடியாக அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1500 கிலோ கிராம் மீன்கள் மீட்பு
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் புகார் அளித்திருத்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று(05) காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது, கருவாடு தயாரிப்பதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கிலோ கிராம் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்ட நடவடிக்கை
இவை அனைத்தும் மனிதப் பயன்பாட்டிற்கு முற்றிலும் உகந்ததல்லாத நிலையில், புழுக்கள் தொற்றுக்குள்ளாகி கடுமையான சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டுள்ளன.

சுகாதார விதிமுறைகளை மீறி, இலாப நோக்கோடும் மக்களின் உயிருடன் விளையாடும் வகையிலும் இவ்வளவு பெரிய அளவிலான மீன்களைச் சேமித்து வைத்திருந்தமை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட அழுகிய மீன்கள் அனைத்தும் பொதுச் சுகாதார நலன் கருதி, அதிகாரிகளின் முன்னிலையிலேயே உடனடியாக அழிக்கப்பட்டன.
அத்துடன், இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் தரம் மற்றும் தூய்மை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மூதூர் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam