ரஸ்ய-உக்ரைன் போரை நிறுத்த துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்! பின்னணியில் உள்ள காரணம்
டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) சார்பில் வழங்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை பார்த்த உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதில் கையெழுத்திட மறுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2022ஆம் ஆண்டு முதல் ரஸ்ய உக்ரைன் போர் தொடர்ந்து வருகின்றது.
இந்த போரை நிறுத்த இந்தியா உள்பட பல நாடுகள் முயன்று வருகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
போர் நிறுத்தம்
அதுமட்டுமின்றி போர் நிறுத்தம் தொடர்பான பணிகளை டிரம்ப் தொடங்கி உள்ளார். இந்நிலையில் உக்ரைன் மீதான போர் நிறுத்தம் செய்ய டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முயன்று வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனை தடுத்து மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை தாண்டி இதன் பின்னணியில் இன்னொரு திட்டத்தை அமெரிக்கா வைத்துள்ளது.
உக்ரைனில் இருக்கும் கனிமவளங்களை அனுமதியுடன் கொண்டு செல்லும் திட்டம் அமெரிக்காவுக்கு உள்ளதாக கூறப்படுகின்றது. உக்ரைனைனில் அரியவகையான பல கனிமங்கள் புதைந்து கிடைக்கின்றன.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கனிமங்களின் புதையல் என்றே உக்ரைனை கூறலாம். அதாவது 2024 உலக பொருளாதார மன்ற அறிக்கையின்(2024 World Economic Forum Report) படி உக்ரைனில் பல அரிய வகை கனிமங்கள் நிறைந்துள்ளன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உக்ரைனில் பெர்லியம், மாங்கனீஸ், காலியம், யுரேனியம், ஜிர்கோனியம், கிராபைட், புளுரைட், நிக்கல் படிகங்கள் மட்டுமின்றி லித்தியம், டைட்டேனியம் உள்ளிட்டறை உக்ரைனில் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பின்னணி
இவை அனைத்தும் பாதுகாப்பு, டெக்னாலஜி, கிரீன் எனர்ஜி உள்ளிட்ட துறைக்கு தேவையான கனிமங்களாக உள்ளன. இந்த கனிமங்களை சுரண்ட அமெரிக்கா நினைக்கின்றது. மேலும் ரஷ்யாவுடன் மோதி இருக்க கூடாது, அமெரிக்காவின் பணம் பெருமளவுக்கு உக்ரைனுக்காக செலவிடப்படுகிறது.
இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்திலேயே கூறி வந்தார். அத்தோடு அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் போரை நிறுத்துவேன் என்று கூறிய டொனால்ட் ட்ரம்ப், நாங்கள் உக்ரைனுக்கு என்னவெல்லாம் கொடுத்தோமோ அதை எல்லாம் திரும்ப பெற விரும்புகிறேன்.
அவர்களிடம் இருக்கும் அரிய வகை கனிமங்களை எடுக்க விரும்புகிறோம். ரூ.43.33 லட்சம் கோடி மதிப்பிலான கனிமங்களை உக்ரைனில் இருந்து அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று கூறியிருந்தார்.
இதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு ஒப்பந்தம் ஒன்றை தயார் செய்தது.
கையெழுத்திட மறுப்பு
இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு துறை சார்ந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து கையெழுத்து வாங்க முயன்ற வேளை அதில் அவர் கையெழுத்திட மறுத்து விட்டார்.
குறித்த ஒப்பந்தத்தில், ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதற்கு பல லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதனை திரும்ப செலுத்தும் வகையில் உக்ரைனில் உள்ள கனிமங்களில் 50 சதவீதத்தஅமெரிக்கா அள்ளி செல்ல அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட மறுத்தததோடு, தனது நாட்டு அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்துக்கு உடன்படகூடாது என்று உத்தரவிட்டார்.
அதோடு இந்த விவகாரத்தில் அமெரிக்கா - உக்ரைன் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவுடன் உக்ரைன் பகைத்துக்கொண்டால், ரஷ்யாவை எதிர்த்து போரிட வழங்கும் உதவிகளை அமெரிக்கா நிறுத்தகூடும்.
இதனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களை சேர்க்க வேண்டும் என்று விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |