கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் : விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்
கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் நேற்று (07) காலை இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ, வட்டரப்பல பகுதியைச் சேர்ந்த பிரதான போதைப்பொருள் வியாபாரிகளான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ் மல்லி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படோவிட்ட அசங்கவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரென கூறப்படும் எட்டயா என்ற போதைப்பொருள் வியாபாரியின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரி
உயிரிழந்த இரு இளைஞர்களும் 20 மற்றும் 36 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். எட்டயா என்ற போதைப்பொருள் வியாபாரி போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.
இந்த வீட்டில் எட்டயாவின் மனைவியின் உறவினரான 20 வயது இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 3.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு பாதாள உலக குழுவின் கூலிப்படையினர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்களையும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் 36 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குழுக்களுக்கு இடையிலான மோதல்
இந்த தாக்குதலுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. படோவிட்ட அசங்க மற்றும் கொஸ் மல்லி ஆகியோர் பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் எனவும், இவர்களுக்கு இடையில் சில காலமாக போதைப்பொருள் தொடர்பில் முரண்பாடு நிலவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களான கொஸ் மல்லியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சுவா சமந்தாவும் டுபாயில் தலைமறைவாகி இரத்மலானை உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வருகின்றனர்.
படோவிட்ட அசங்கா டுபாயில் மறைந்திருந்து கல்கிஸ்ஸ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வருகிறார். கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக, 4 பேர் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மூவர் படோவிட்ட அசங்கவின் உதவியாளர் எனவும் மற்றைய நபர் கொஸ் மல்லியின் உதவியாளர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.