நடுவீதியில் வாகனங்களை சேதப்படுத்திய இளைஞர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பத்தரமுல்ல தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு, நான்கு கார்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று (13) உத்தரவிட்டார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்
வெலிக்கடை பொலிஸார் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் எனவும், அவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அப்போது அவரது உடலில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், சம்பவம் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் அதிகளவான போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.