ஜனவரி 15 முதல் நாட்டின் மழை நிலைமை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
ஜனவரி 15 ஆம் திகதி முதல் நாட்டில் மழை நிலைமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (13) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சீரான வானிலை
படி, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
சிறிதளவு மழை
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யும் அதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் சாதாரணமானது முதல் மிதமான அலை வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிராந்தியங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அக்கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.