யாழில் பல இலட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது
யாழ்ப்பாணத்தில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறிப் பல இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதை கொண்ட இளம்பெண் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம்(14.04.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத வெளிநாட்டு பயணம்
சந்தேகநபர் சட்டவிரோதமாக கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி ஒருவரிடம் கட்டம் கட்டமாக 30 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட பின்னர் தொடர்புகளைத் துண்டித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், யாழ்.விசேட குற்ற விசாரணைப் பிரிவின் தலைமையிலான பொலிஸ் குழுவால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சந்தேகநபரின் வங்கிக் கணக்கிலக்கம் மற்றும் தொலைபேசிப் பதிவுகளின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், டுபாயில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வழிகாட்டலிலேயே வெளிநாடு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சந்தேகநபரின் வங்கிக்
கணக்கில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான கொடுக்கல், வாங்கல்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.