இளையோர் உயிர்கொல்லி போதைப்பொருளை நாடுவது அதிகரித்துள்ளது: வடக்கு ஆளுநர்!
இளையோர் உயிர்கொல்லி போதைப்பொருளை நாடுவதும், சமூகப்பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அதிகரித்து செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இளையோர்களை அந்தச் சிந்தனைகளிலிருந்து விடுவிப்பதற்கு பெரும் பங்காற்றக் கூடியது விளையாட்டுச் செயற்பாடுகள் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (6) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
விளையாட்டுத்துறை
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுத்துறையை இளையோரிடத்தில் மேம்படுத்தி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்.
அந்த மாற்றத்தை நோக்கி விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களும் உழைக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டில் எமது மாகாணத்தில் விளையாட்டுத்துறையில் மாற்றங்கள் தெரிய வேண்டும்.
தேவையான பௌதீக வளங்களைப்பெற்றுத் தருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். பெறுபேறுகள் சிறப்பாக அமைவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும், என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
