காட்டு யானைகள் தாக்கியதில் இளைஞன் பலி
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளப்பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முத்தையன்கட்டு குளப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரணுக்குக் கீழ் நேற்று மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி வந்துள்ளனர்.
அவர்களுடன் இணைந்து மேற்படி இளைஞரும் யானையை விரட்ட முற்பட்டுள்ளார். இதன்போது இளைஞரை யானை தாக்கியுள்ளது.
ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணை
இதன்போது படுகாயமடைந்த இளைஞன் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான், முத்துவிநாயகபுரம் பகுதியில் வசிக்கும் கேந்திரராசா பிறையாளன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் முத்துவிநாயகபுரம் எனப்படும் கிராமத்தில் பேராற்றினை அண்டிய ஒரு பகுதியில் புகுந்த 3 காட்டு யானைகளால் மக்கள், விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |