போதைப் பொருள் விற்பனை தொடர்பான பிரச்சினை-இளம் பெண் கூட்டு வன்புணர்வு
ஹெரோயின் போதைப் பொருளை மோசடி செய்ததாக கூறி, இளம் பெண்ணொருவரை கடத்திச் சென்றுள்ள கொழும்பு புளுமெண்டால் பகுதியை சேர்ந்த பிரதான போதைப் பொருள் விற்பனையாளரான பெண்ணொருவர், தனது ஆட்களை கொண்டு கூட்டாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளுமெண்டால் பகுதி பெண்ணிடம் போதைப் பொருளை பெற்று விநியோகித்து வந்த இளம் பெண்
இது சம்பந்தமாக புளுமெண்டால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹோமாகமை கேரல என்ற பிரதேசத்தில் வசித்துக்கொண்டு, தொம்பே மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போதைப் பொருளை விநியோகித்து வந்த 27 வயதான இளம் பெண்ணே இவ்வாறு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த இளம் தனது வியாபாரத்திற்கு தேவையான போதைப் பொருளை புளுமெண்டால் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணிடமே பெற்றுக்கொண்டுள்ளார். புளுமெண்டால் பிரதேசத்தை சேர்ந்த பிரதான போதைப் பொருள் விற்பனையாளரான பெண்ணுக்கு சரியான முறையில் அதற்கான பணத்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பெற்றுக்கொண்ட போதைப் பொருளுக்கு பணத்தை செலுத்தாத நிலையில், மீண்டும் போதைப் பொருளை கொள்வனவு செய்ய இளம் பெண், தனது ஆண் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புளுமெண்டால் பிரதேசத்தில் உள்ள பெண்ணிடம் சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கு தேவையான போதைப் பொருளை புளுமெண்டால் பிரதேசத்தை சேர்ந்த பெண் வழங்கியுள்ளார்.
மதுவரி திணைக்கள அதிகாரிகள் எனக்கூறி இளம் பெண்ணை அழைத்துச் சென்ற நபர்கள்
பெற்றுக்கொண்ட போதைப் பொருளை எடுத்துச் செல்லும் வழியில் வழிமறித்த மதுவரி திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட சிலர், பெண்ணை கைது செய்துள்ளதாக கூறி, அருகில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தன்னை கைது செய்ததாக கூறி அழைத்து வந்தவர்கள் புளுமெண்டால் பெண்ணின் உதவியாளர்கள் எனவும் போதைப் பொருளுக்கு பணத்தை வழங்காததால், இவர்கள் தன்னை கடத்தி வந்துள்ளதாக பெண் பின்னர் அறிந்துக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பணத்தை வழங்காது மோசடி செய்த குற்றத்திற்காக புளுமெண்டால் போதைப் பொருள் விற்பனையாளரான பெண்ணின் உதவியாளர்கள், இளம் பெண்ணை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன் கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர், இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபா பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு விடுவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண், நேற்று முன்தினம் புளுமெண்டால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக தகவல்கள் தெரியவந்துள்ளன.