முதுகு வலி காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத யோஷித! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணையைத் தொடர்வதற்காக, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12.11.2026) உத்தரவிட்டுள்ளது.
இன்று இந்த வழக்கின் சாட்சி விசாரணையைத் தொடரத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு முதுகு தொடர்பான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
யோஷித ராஜபக்ச
இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி சட்டத்தரணி ஒரு மருத்துவச் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்போது, அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இன்று அரசுத் தரப்பு தனது சாட்சியங்களைச் சமர்ப்பித்து முடிக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
மேலும், அரசுத் தரப்பு சாட்சிகளில் இன்னும் மூவர் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், அடுத்த விசாரணையின் போது அந்த மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் கருத்தில் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் விசாரணையைத் தொடர்வதற்காக நவம்பர் 26-ஆம் திகதியைத் திகதியாக நிர்ணயித்ததுடன், அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.
தெஹிவளை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் ஐந்து காணித் துண்டுகளை வாங்குவதற்காக 730 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டதன் மூலம், யோஷித ராஜபக்ச பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, சட்டமா அதிபர் அவருக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக வரவு - செலவுத் திட்டம் வரை காத்திருக்க வேண்டுமா! அரசிடம் சஜித் கேள்வி
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri