சீன ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கிய மாலைத்தீவு: இந்தியாவிற்கு வலுக்கும் அச்சுறுத்தல்
சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3 இந்த மாத இறுதியில் மாலைத்தீவில் நங்கூரமிடுவதற்கு மாலைத்தீவு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான அழுத்தம் மற்றும் இந்த கப்பலை "உளவு கப்பல்" என்று முத்திரை குத்தி பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் மாலைத்தீவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவு கடற்பரப்பில் சீனக் கப்பல்களை நிறுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாலைத்தீவு வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஆழமான நீர் ஆய்வு திட்டம்
அத்துடன் அண்மையில் பதவியேற்ற ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு உளவு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்து அதற்கு அனுமதி வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன்படி சீனக்கப்பல், ஜனவரி முதல் தெற்கு இந்தியப் பெருங்கடலில் "ஆழமான நீர் ஆய்வு" நடத்த திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்த கப்பல் இலங்கையின் கொழும்பில் நிறுத்த அனுமதி கோரியிருந்தது.ஆனால் அந்த கோரிக்கையை இலங்கை நிராகரித்து விட்டது.
சீனாவுடனான உறவு
இதேவேளை, மாலைத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஜனாதிபதி முய்ஸு, இந்த மாத இறுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விஜயத்தின் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. மாலைத்தீவின் தற்போதைய நிர்வாகம் சீனாவுடனான அதன் நெருங்கிய உறவைக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |