சீனாவில் உச்சம் தொட்டுள்ள கோவிட்! ஜி ஜின்பிங் உரையினால் எழுந்த புதிய சர்ச்சை
சீனாவில் கோவிட் தொற்று உச்சம் தொட்டுள்ள நிலையில், சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜி ஜின்பிங் தனது உரையில் ஒரு முறை கூட கோவிட் வைரஸ் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை எனவும் நிலைமை எதோ கட்டுக்குள் இருப்பதைப் போலவே பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சீனாவில் ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகள் மக்கள் போராட்டத்தின் காரணமாக நீக்கப்பட்டமை தற்போது வைரஸ் பாதிப்பு இந்தளவு அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப்பட்டது.
தகவல்களை மறைக்கும் சீனா
சீனாவில் மருத்துவமனைகள் அனைத்துமே கோவிட் நோயாளிகளினால் நிரம்பியுள்ளன.
இருந்த போதிலும், சீனா தனது கோவிட் சூழல் கட்டுக்கடங்காமல் இருப்பது தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
இதனிடையே சமீபத்தில் மக்கள் முன் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கோவிட் கட்டுப்பாட்டுக் கொள்கை அறிவியல் பூர்வமானது என்றும் மிகச் சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜீரோ வைரஸ் நடைமுறையை உடனடியாக நீக்கியது குறித்தும் நிலைமை சமாளிக்கத் தயார் நிலையில் இருக்காதது குறித்தும் ஜி ஜின்பிங் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
அறிவியல் அடிப்படையில் எங்கு கோவிட் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
"அறிவியல் அடிப்படையிலான சோதனை மூலம் நாங்கள் முடிந்தவரை மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துள்ளோம். சூழலுக்கு ஏற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிகாரிகள், குறிப்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தைரியத்துடன் கோவிட்டை கட்டுக்குள் வைத்திருக்கப் போராடினார்கள். கடின முயற்சிகளால், முன்னெப்போதும் இல்லாத சிரமங்கள் மற்றும் சவால்களை நாங்கள் வென்றுள்ளோம்.இது யாருக்கும் எளிதான ஒன்றாக இருக்கவில்லை" என்றார்.
ஜீரோ கோவிட் நடைமுறை உடனடியாக நீக்கப்பட்டதால் இப்போது அங்கு கோவிட் உச்சம் தொட்டுள்ளது. பரிசோதனை நடவடிக்கைகள், ஊரடங்குச்சட்டம், பயண கட்டுப்பாடுகள் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.
அதிருப்தியில் மக்கள்
இருப்பினும், இது குறித்தும் ஜி ஜின்பிங் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாத நிலையில், மாறாகச் சீனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளதாக மட்டுமே தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்த துயரத்தை வென்று காட்டுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொடர்பான மரணம் உட்பட, அவர் தனது உரையில் ஒருமுறை கூட கோவிட் வைரஸ் என்ற வார்த்தையைக் கூட குறிப்பிடவில்லை. பூகம்பம், வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளைச் சீனா எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும், சில மோசமான விபத்துகளையும் எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு அவர் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு முக்கிய மாகாணங்களுக்கு நேரடியாகச் சுற்றுப்பயணம் செய்தது குறித்தும் ஜி ஜின்பிங் நினைவு கூர்ந்துள்ளார்.
அதேநேரம் சீனா அரசுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான போராட்டம் நடைபெற்றது. அது குறித்தும் அவர் பேசவில்லை.
ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை மூலம் ஒருமித்த கருத்துகளை ஏற்படுத்துவது முக்கியம் என்று மட்டும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கோவிட் பாதிப்பு தாண்டவம் ஆடும் நிலையில், இது குறித்து ஜி ஜின்பிங் பேசாததது சீன மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் விவகாரம்
தொடர்ந்து சீன இளைஞர்கள் மற்றும் தைவான் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "ஒரு நாட்டின் இளைஞர்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த நாடு செழிக்கும்.. சீனா மேலும் வளர்ச்சியடைய, நமது இளைஞர்கள் முன்னோக்கி நகர வேண்டும்.
புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். தைவானில் உள்ள மக்களும் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். இரு தரப்பு மக்களும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் சீனாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நம்மால் உறுதி செய்ய முடியும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
