பிரிட்டன் மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு(Video)
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ்அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வு செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்றுள்ளது.
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் மூன்றாம் சார்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலாவது உத்தரவு
இந்நிலையில் மகாராணியின் இறுதி சடங்கு நடைபெறும் அன்று நாட்டின் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என புதிய மன்னர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு புதிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசர் மூன்றாம் சார்லஸின் முதலாவது உத்தரவாக கருதப்படுகின்றது.
மன்னரின் கன்னி உரை
மன்னராக சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சார்லஸ், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்த தனது வாழ்நாளில் எஞ்சிய காலம் முழுவதும் பாடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார்.
அரசியலமைப்பை நிலைநிறுத்தும் கடமைகளை மறைந்த மகாராணி மிகவும் உறுதியான பக்தியுடன் செய்தததை போன்று தாம் மேற்கொள்வேன் என அவர் கூறியுள்ளார்.
மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக மன்னராக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
மன்னரின் உறுதிமொழி
தனது அன்புக்குரிய தாய் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார் என பிரித்தானிய மன்னர் தெரிவித்துள்ளார்.
தனது தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தால் ஆழ்ந்த வருத்தத்தை உணர்வதாகவும், தேசத்திற்கு அவரது "வாழ்நாள் சேவையை" தொடர உறுதியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகாராணியான பின்னர் அன்பான மனைவி கமிலாவிடம் இருந்து நம்பகமான உதவியை பெற முடியும் எனவும் மன்னர் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.