முதல் பயணத்தை ஆரம்பித்த உலகின் மிகப்பெரிய கப்பல்
அமெரிக்காவிலுள்ள றோயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணிகள் கப்பல் மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி 7 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலுக்கு காற்பந்து வீரரான லியொனல் மெஸ்சி மற்றும் அமெரிக்காவில் உள்ள காற்பந்து கழகமான இன்டர் மியாமி (Inter Miami) குழுவினர் மூலம் ”ஐகொன் ஒப் த சீஸ்” (Icon of the Seas) என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மிகச்சிறந்த விடுமுறை
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் என்று கூறப்படும் இந்த கப்பலானது சுமார் 1,200 அடி நீளம் கொண்டதாகவும் மொத்தம் 20 தளங்களுடன் காணப்படுகின்றது.
இந்த கப்பலில் 6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், பனி சறுக்கு வளையம், தியேட்டர் மற்றும் 40 இற்கும் மேற்பட்ட உணவகங்கள், பார்கள், ஓய்வறைகளை கொண்டமைந்துள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் 2,350 பணியாளர்களுடன் அதிகபட்சமாக 7,600 பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
பயணிகள் கப்பல் குறித்து றோயல் கரீபியன் குழுமத்தின் தலைவர் ஜேசன் லிபர்டி கூறுகையில்,
"ஐகொன் ஆப் த சீஸ்” என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் கனவுகள், புதுமைகள் மற்றும் முயற்சிகளின் வெளிப்பாட்டுடன் உலகின் மிகச்சிறந்த விடுமுறைக்கால அனுபவங்களையும் இது வழங்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |