உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்த ஜெசிகா சாஸ்டைன் : 'மனிதாபிமான நிகழ்வு' திட்டம் தயாரிப்பு
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஜனாதிபதி நிர்வாகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக்(Andriy Yermak) ஆகியோரை சந்தித்துள்ளார்.
"The Eyes of Tammy Faye" திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற சாஸ்டைன், உக்ரைனுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் சமீபத்திய பிரபலங்களில் ஒருவர்.
இச் சந்திப்பு தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்ததாவது,
“அமெரிக்க நடிகை ஜெசிகா சாஸ்டைன் இன்று உக்ரைனில் இருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை, பிரபலமானவர்களின் இத்தகைய வருகைகள் மிகவும் மதிப்புமிக்கவை. இதன் மூலம், நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் கேட்கும், அறியும் மற்றும் புரிந்து கொள்ளும். ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நிகழ்வு திட்டம்
“மேலும், நாங்கள் ஒரு முக்கியமான மனிதாபிமான நிகழ்வைத் தயாரிக்கிறோம், என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
"வெளிநாட்டில் உள்ள உக்ரைனின் அனைத்து நண்பர்களுக்கும், உலகில் எங்கள் உறவுகளை விரிவுபடுத்த உதவும் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் வெற்றி பெற எல்லாவற்றையும் செய்கிறோம், எங்கள் நாட்டைப் பாதுகாக்க எல்லாவற்றையும் செய்கிறோம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டில்லர், சீன் பென், லீவ் ஷ்ரைபர் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் முன்பு உக்ரைனுக்குச் சென்ற ஹாலிவுட் பிரபலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.