2 மில்லியன் டொலர் அவசரகால நிதியை விடுவித்தது உலக சுகாதார நிறுவனம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, அங்கு அதிகரித்து வரும் அவசர கால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது அவசரக்கால நிதி ஒதுக்கீட்டிலிருந்து (CFE) 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளது.
லெபனான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் கடும் பாதிப்புகளைச் சமாளிக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.
இது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய பணிப்பாளர் டாக்டர் ஹனன் பால்கி, போரினால் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள சுகாதாரக் கட்டமைப்புகள் தற்போது பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், முன்களப் பணியாளர்களைக் காக்கவும் உயிர் காக்கும் சேவைகளைத் தொடரவும் இந்த நிதி அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் கூடுதல் ஆதரவு
இந்த நிதி ஒதுக்கீட்டில், லெபனானிற்கு அதிகபட்சமாக 1 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. அங்கு போரினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளதாலும் அவசரச் சிகிச்சை மற்றும் மருத்துவ விநியோகங்களை மேம்படுத்த இந்த நிதி உதவும்.

அதேபோல், ஈராக்கிற்கு 500,000 டொலர்களும், லெபனானிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள சிரியாவிற்கு 500,000 டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஈரான் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அங்கேயும் முன்னுரிமை சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, குவைத் உள்ளிட்ட நாடுகள் வழங்கிய தன்னார்வ நிதிப் பங்களிப்புகள் மூலம் இந்த உதவி சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதால், சர்வதேச சமூகத்தின் கூடுதல் ஆதரவை உலக சுகாதார நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது.