உலகப்புகழ்பெற்ற ஒன்பது தூண் தொடருந்து பாலத்தில் நீர்க்கசிவு
இலங்கையின் உலகப்புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான எல்ல, நைன் ஆர்ச் (ஒன்பது தூண்) தொடருந்து பாலத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையக தொடருந்து பாதையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக எல்ல பிரதேசத்தில் ஒன்பது வளைவுத் தூண்களின் மீது 1921ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த நைன் ஆர்ச் பாலம், நூற்றாண்டுகளைக்கடந்த நிலையிலும் உறுதியாக இருப்பதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது.
நீர்க்கசிவு
இந்நிலையில் மழைக்காலங்களில் நைன் ஆர்ச் பாலத்தில் நீர்க்கசிவு ஏற்படத் தொடங்கியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தமக்கு இதுவரை தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ள புகையிரத திணைக்களப் பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்தி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.