உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: தமிழக அரசு விடுத்துள்ள நேரடி விண்ணப்பம்
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை (World Chess Championship 2024) சென்னையில் நடத்த வேண்டும் என தமிழக அரசு நேரடியாக ஒரு விண்ணப்பம் அளித்துள்ளது.
கனடாவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் ( FIDE Candidates 2024 Chess) தொடரில் தமிழக இளம் செஸ் வீரரான குகேஷ் (Gukesh) சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீன வீரர் டிங் லிரினுடன்(Ding Liren) இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
இந்த ஆண்டிற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.
இந்த இறுதிப் போட்டியை முதலில் இந்தியாவில் உள்ள டெல்லி(Delhi) அல்லது சென்னை(Chennai) அல்லது குஜராத்தில்(Gujarat) நடத்துவதற்கு கேண்டிடேட்ஸ் தொடர் முடிவடைந்த பிறகு உலக செஸ் சம்மேளனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் (Dev Patel) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொடரை நடத்த விருப்பமுள்ள நாடுகள் விண்ணப்பிக்கலாம் என்று உலக செஸ் சம்மேளனம் தெரிவித்திருந்த நிலையில் பல நாடுகளும் விண்ணப்பம் செய்து வருகின்றன.
இறுதி தீர்மானம்
இதையடுத்தே, இந்தியாவில் சென்னை, குஜராத், டெல்லி என 3 இடங்களில் இந்த தொடரை நடத்துவதற்கு இந்திய செஸ் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்த நிலையில் தற்போது, தமிழக அரசு இந்த சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்த வேண்டும் என்று நேரடியாக ஒரு விண்ணப்பம் அளித்துள்ளது.
இதன் காரணமாக, ஜூன் மாத இறுதியில் இந்த சாம்பியன்ஷிப் தொடர் எந்த நாட்டில் நடைபெறும் என்ற இறுதி தீர்மானத்தை ஃபிடே கவுன்சில் (FIDE Council) அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |