எந்நேரமும் தயாராக இருக்குமாறு அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்! தனியார்துறையினருக்கு விசேட அறிவிப்பு
அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பிலான திட்டம் இன்று முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அரச செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும்.
கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமூகமளிக்காத பணியாளர்களது பணிநாள், தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும்.
அதேநேரம், அனைத்து அரச ஊழியர்களும் இணையவழியில் தொழிலாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் துறையினரை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டு மக்கள் எரிபொருள் நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தனியார்துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறும் தனியார் நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளில் சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு வலய கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தியுள்ளது.