நல்லூரில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகள் ஆரம்பம்
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன.
மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த காணியில் ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது யாழ். மாநகர மேயர், பிரதி மேயர், சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காட்சிப்படுத்தலும், மாவீரர் நாள் நினைவேந்தலும் நடைபெற்று வருகின்றது.

மாவீரர் நினைவேந்தல் பணி
இந்நிலையில், இந்த ஆண்டு அந்தப் பகுதியில் வழமையாக மாவீரர் நினைவேந்தல் பணிகளை முன்னெடுக்கும் தரப்புக்குப் போட்டியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்கே குறித்த காணியை வழங்க வேண்டும் எனக் கோரி வந்தனர். ஒரு காணியை இரண்டு தரப்புக்கள் கோரியதால் அதை யாருக்கு வழங்குவது என்பதில் முடிவு எட்டப்படாத நிலை காணப்பட்டது.
இதையடுத்து யாழ். மாநகர சபையின் கடந்த அமர்வில் கருத்துத் தெரிவித்த மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா, இம்முறை அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைத்து குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தார்.

இந்த யோசனையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) தவிர்ந்த யாழ். மாநகர சபையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதையடுத்தே குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாநகர மேயரும், பிரதி மேயரும் "மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |