யாழ்.ஆணைக்கோட்டையில் அதிசயக் கிணறு
இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவிலிருந்து மட்டுமல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி . பி 4 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்காலப் பண்பாடு வளர்ச்சியடைந்த நிலையைக் காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் பெருங்காலத்தின் மிக முந்திய தோற்றப்பாடு அனுராதபுரத்திலும் சிகிரியா அலிகல ஒதுக்கிடத்திலும் கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி .மு 800 வரையான காலப்பகுதிக்கு உட்பட்ட சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு காபன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பெருங்கற்காலப் கலாச்சார மையங்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளன. காரைநகர், ஆனைக்கோட்டை , கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி, மாந்தை, தேக்கம் ,பொம்பரிப்பு , அக்குறுகொட,அனுராதபுரம், கதிர்காமம், இபன்கட்டுவ, அம்பாந்தோட்ட போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
“யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள பெருங்கற்கால பண்பாட்டு மையங்களினை இரு பெரும் பிரிவுகளாக வகுத்து ஆராய்ந்தன” என்கிறார் பேராசிரியர் ராகுபதி.
எந்த ஒரு பௌத்த செல்வாக்குகளும் அற்ற நிலையில் வேர் ஊன்றி இருந்த பெருங்கற்கால பண்பாட்டு ஆனைக்கோட்டை , காரைநகர் (பௌத்த வருகை முன்னர் பெருங்கற்கால பண்பாட்டை வளர்த்தெடுத்த மையங்கள்)
பௌத்தமதத்துடன் இணைந்து காணப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டு மையங்கள் வட இலங்கையின் முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகின்றது.
1980களில் குடாநாட்டில் உள்ள நாற்பது புராதன மையங்கள் அடையாளப்படுத்திய பேராசிரியர் பொ. இரகுபதி அதன் தலைமை குடியிருப்பாக கந்தரோடையை குறிப்பிடுகின்றார்.
ஆனால் இக்குடி குடியிருப்புக்களைப் பெருங்கற்கால மக்களது பண்பாட்டின் சிறப்பாகக் காணப்படும் ஈமசின்னம் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆனைக்கோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டது பூர்விக வரலாறு பற்றிய ஆய்வில் ஆனைக்கோட்டை முக்கியம் பெறுகின்றது.
ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஊராகும்.
நாவாந்துறைப் பகுதியைச் சீர்செய்வதற்காக கரையாம்பிட்டி மண்மேட்டை வெட்டப்பட்ட பொழுது இதில் காணப்பட்ட பண்பாட்டு எச்சங்கள் 1980களில் பேராசிரியர் இந்திரபாலா தலைமையில் அகழ்வு இடம்பெற்றது.
இங்கு இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் பின்னர் பேராசிரியர் இந்திரபாலா மேற்கொண்ட அகழ்வின் போது இரு இடங்களில் பெருங்கற்கால மக்களது ஈமசின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விரு ஈமசின்னமையங்களும் பத்து அடி இடைவெளியில் நான்கு அடி உயரம் கொண்ட மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஈமசின்னமையங்களில் 5 அடி உயரமுடைய இரு மனித எலும்புக்கூடுகள் கிழக்கு மேற்கு திசையை நோக்கிய வண்ணமாக அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
இதில் இரு கைகளும் கட்டப்பட்ட எலும்புக்கூட்டைச் சுற்றி வைக்கப்பட்ட மட்பாண்டங்களில் கருப்பு சிவப்பு , தனி கறுப்பு சிவப்பு நிற கிண்ணங்கள் வட்டில்கள், பானைகள் என்பன குறிப்பிடத்தக்கவை.
சில மட்பாண்டங்களில் சுறா மீன், மிருக எலும்புகள் நண்டின் ஓடுகள் என்பவற்றுடன் சிற்பி, சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இப் பண்பாடு இங்கு இரும்பின் பயன்பாடு புழக்கத்தில் வந்ததனை உறுதிப்படுத்த இரும்பு கருவிகளும் , கழிவிரும்புகளும் கிடைத்துள்ளன.
சிற்பி , சங்கு, சுறா மீன் எலும்புகள் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதே சமயம் ஆனைக்கோட்டை மையம் கடலுடன் கொண்ட தொடர்பையும் காட்டுகின்றன. வடமாகாணத்தினை பொறுத்தவரை இங்கு கிடைக்கப்பட எலும்புக்கூடுகள் இரண்டாவது ஆகும்.
முதலாவது திருக்கேதீஸ்வரத்தில் மறைந்த சண்முகநாதன் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தது. ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்து பொறித்த மட்பாண்டம் லட்சுமி நாணயம் உரோம மட்பாண்டம் என்பவறை ஆதாரமாக கொண்டு இரு ஈமசின்னங்களும் இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களுக்குரியது என உறுதிப்படுத்த முடிகின்றது.
எலும்புக்கூட்டின் தலைமாட்டின் அருகில் பெறப்பட்ட வெண்கலமுத்திரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்காலம் கி.மு 3 நூற்றாண்டு 1.7 , 1.5 cm நீள அகலம் உடையது .இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும் கீழ் வரிசையில் 3 பிராமி எழுத்துக்களும் உள்ளன.
இது மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது . இது எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாகக் கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார்.
ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார்.
ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை.
எத்துவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். இந்திரபாலாவின் வாசிப்பு, இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார்.
இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும் போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும்.
"த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார். இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன.
"கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும்.
மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம் பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது.
இரகுபதியின் வாசிப்பு பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார்.
இவர், கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்.
மதிவாணனின் வாசிப்பு முனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.