மகளிருக்கான ஆசிய கிரிக்கெட் சுற்றுத்தொடர் - ஆதிக்கம் செலுத்தும் இந்திய, பாகிஸ்தான் அணிகள்
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண 20க்கு 20 போட்டியின் ஏ பிரிவில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய (India) அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
அதேவேளை, முதல் தடவையாக 20க்கு 20போட்டி ஒன்றில் இந்திய மகளிர் அணி, 200இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தம்புள்ளையில், நேற்று (21.07.2024) இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சபாலி வர்மா 18 பந்துகளில் 37 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், ஹர்மன்ப்ரீத் 41 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டியுள்ளார்.
பவர்பிளே ஓவர்கள்
இந்தநிலையில், அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும் பவர்பிளே ஓவர்களில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது, ரிச்சா கோஸ் 29 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மேலும், பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியால், 20 ஓவர்களில் 127 ஓட்டங்களையே பெறமுடிந்தது.
இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தானிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
வெற்றிக்கான 109 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள துடுப்பாடிய பாகிஸ்தானிய அணியின் குல், 35 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றதுடன் முனீபா, 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் விளையாடியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |