சஜித்தின் கூட்டத்திற்கு சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தமையினால் பரபரப்பு
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்தமையைினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
பதுரலிய கம்புராவல பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஏற்பாட்டில் நேற்று மக்கள் பேரணி இடம்பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஊர்வலமாகச் சென்ற வயோதிப பெண் ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வலல்லாவிட்ட யகிரல பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பதுரலிய, போகஹா சந்தியிலிருந்து பேரணி நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாகச் சென்ற குறித்த பெண், கம்புரவல பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் விழுந்து உயிரிழந்ததாக பதுரலிய பொலிஸ் பொறுப்பதிகாரி தில்ருக் கொலம்பகே தெரிவித்தார்.
1990 சுவசரிய அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குறித்த பெண் பதுரலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வயோதிபப் பெண் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கான மருந்து சீட்டுகள் அவரிடம் இருந்ததாகவும் பதுரலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.