நுவரெலியாவில் வெளிநாட்டு மாணவியின் கைப்பையை எடுத்துச் சென்ற பெண்! உதவிகோரும் பொலிஸார்
நுவரெலியா நகரிலுள்ள உணவகம் ஒன்றில் , மறந்து வைக்கப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்றார் என சந்தேகிக்கப்படும் பெண் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கைப்பையே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உணவகத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைப்பை திருட்டு
குறித்த மாணவி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த 09ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது, நுவரெலியா நகர மத்தியிலுள்ள உணவகம் ஒன்றில் குடும்பத்தினருடன் மதிய உணவு உட்கொண்ட அவர், தனது கைப்பையை இருக்கையில் வைத்துவிட்டு, அதனை மறந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

மறுநாள் மீண்டும் குறித்த உணவகத்திற்குச் சென்று கைப்பை தொடர்பில் விசாரித்தபோது, உணவகத்திற்கு வருகை தந்த மற்றொரு பெண் அந்தப் பையை எடுத்துச் செல்லும் காட்சிகளை உணவக நிர்வாகத்தினர் சிசிடிவி மூலம் பெற்றுக்கொடுத்து உதவியுள்ளனர்.
குறித்த கைப்பைக்குள் மாணவியின் இலங்கை தேசிய அடையாள அட்டை, பிரித்தானிய வங்கி அட்டைகள், விசா அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் 50 ஸ்டேர்லிங் பவுண்கள் பணம் ஆகியவை இருந்துள்ளன.
கோரிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் நுவரெலியா பகுதியில் பயணித்தமை தொடர்பான பல சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால்( 0718591097 / 052 2222 222) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், கைப்பைக்குள் இருந்த பணம் தனக்குத் தேவையில்லை எனவும், அதிலுள்ள அத்தியாவசிய ஆவணங்களை மட்டும் மீள ஒப்படைத்தால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
தாம் கல்வி நடவடிக்கைகளுக்காக விரைவில் மீண்டும் பிரித்தானியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், தவறுதலாக கைப்பையை எடுத்துச் சென்றிருந்தால் அதிலுள்ள முக்கிய ஆவணங்களை ஒப்படைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலவேளை தெரியாமல் தவறுவலாக எடுத்து செல்லப்பட்டிருந்தால் அதனை மீள ஒப்படைக்குமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரப்பட்டுள்ளது.




