இலங்கை ராஜபக்சர்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து அல்ல! விமல் சீற்றம்
குடும்ப ஆட்சியின் பின்னால் அணி திரண்டது போதும், பாரம்பரிய அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வரட்டும் என மேலவை இலங்கை கூட்டணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தி நாட்டை மீட்கவே மேலவை இலங்கை கூட்டணி உதயமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை என்பது ராஜபக்சர்களுக்கோ அல்லது பண்டாரநாயக்கக்களுக்கோ எழுதி வைக்கப்பட்ட சொத்து அல்ல.
மக்கள் ஆணைக்கு புறம்பான நடவடிக்கை
அது மக்களுக்கானது. ஆட்சியும் மக்களுக்குரியதாகவே இருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் மக்கள் ஆணைக்கு புறம்பாக நடவடிக்கைகள் இடம்பெற்றன. அமைச்சரவையில் இருந்து நாம் சுட்டிக்காட்டினோம். அதன் பலனாக வெளியேற்றப்பட்டோம்.
வாக்குகள் பெற்று ஆட்சிபீடம் ஏறும்வரைதான் பங்காளிக் கட்சிகள் வேண்டும். இந்த அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.
எமது கூட்டணியில் பெரிய கட்சி, சிறிய கட்சி இணைந்தால் கூட சம அந்தஸ்தே வழங்கப்படும். பாரம்பரிய கூட்டணிக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.
புதியதொரு கூட்டணி
நாட்டுக்காக, மக்களுக்காக புதியதொரு கூட்டணி அரசியல் கலாச்சாரத்தை நாம் உருவாக்கியுள்ளோம்.
இதில் உள்ள தலைவர்கள், மதிநுட்பத்துடன் செயற்படக் கூடியவர்கள். அதேவேளை, ஐரோப்பாவிடமிருந்த பலம் ஆசியா பக்கம் சாய்கின்றது.
எனவே, தேசிய
ரீதியில் மட்டுமல்ல ஆசிய சக்திகளுடன் நிற்கும் வகையிலும் எமது நடவடிக்கை
அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.