அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள புதிய கட்சி:பெயர் பலகையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை
விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் தமிழர் மீதும், தமிழ் பேசும் மக்கள் மீதும் எவ்வித அக்கறையும் தமக்கு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் தமது கட்சி கூட்டணியின் அங்குரார்பணத்தை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடரும் சிங்கள பௌத்த பேரினவாதம்
மேலும் தெரிவிக்கையில்,“விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் தமது கட்சி கூட்டணியின் அங்குரார்பணத்தை அறிவித்துள்ளனர். இதன்போது நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். அவர்களின் கட்சியின் பெயரை சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்திருப்பது பிழையாக உள்ளது.
இதை பார்த்து ஒரு புறம் நான் கவலை அடைந்தாலும், மறுபுறம் திருப்பதி அடைகின்றேன்.
தமிழர் மீதும் தமிழ் பேசும் மக்கள் மீதும் எவ்வித அக்கறையும் தமக்கு இல்லை. தமிழ் மொழியை அலட்சியம் படுத்துகின்றோம். அவர்களை கணக்கில் எடுக்க தயாராக இல்லை என்றும் சிங்கள பௌத்த பேரினவாத போக்கை கடைபிடிப்பதாகவும் பகிரங்கமாக தெரியபடுத்தி இருக்கின்றனர்.
இந்த புதிய கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் தரப்பினர் இதை எடுத்து கூற வேண்டும். அப்படி எடுத்து கூறுவதிலும் பிரயோசனம் இல்லை என நான் நினைக்கின்றேன்.
புதிய கட்சியல்ல இது ஒரு கும்பல்
இவர்களை நான் கட்சி என்று கூற போவதில்லை, கும்பல் என்று தான் கூறுவேன், தொடர்ந்தும் அப்படி தான் கூறுவேன்.
இந்த கும்பல் மகிந்தவின் பொதுஜன பெரமுன கட்சியை விட்டு வந்ததுக்கு காரணம், மகிந்த மக்களுக்கான நிகழ்ச்சியை முன்னெடுக்காமல் தனது குடும்ப நிகழ்ச்சியை முன்னெடுத்தமை தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இறுதியில் இந்த கும்பல் மகிந்தவிடம் தான் செல்லும் இவர்களுக்கு அவரை விட்டால் ஆள் இல்லை. அவர்களுக்கும் அப்படி தான்.
மேலும், மகிந்த தனது தவறை மறைக்க கோட்டாபய மற்றும் பசிலை பலிகடா ஆக்குகிறார். கோட்டாபயவை அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் பசிலை அமெரிக்கா செல்ல சொல்லியும் சொன்னதாக தகவல் கிடைத்தது.
மகிந்த தமது குடும்ப ஆட்சியை நிறுத்த போவதில்லை. அடுத்து தனது மகனை முடி சூட பார்க்கிறார். இதை சிங்கள மக்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழர்களுக்கு தனி நாடு
இவர்களை மறுபடியும் நம்பி முட்டாள் தனமாக சிங்கள மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றால் இலங்கை இரண்டு நாடாக பிரிய வேண்டிய நிலை தான் ஏற்படும்.
சிங்களவர்களின் செயற்பாடால் தான் இப்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்றோம். இனியும் அப்படி இயலாது.
மறுபடியும் அந்த நிலைமை தொடரும் என்றால் தமிழர்களுக்கு தனி நாடு வழங்கி இலங்கை இரண்டாக பிரியும் நிலையே வரும். இது எனது ஆசை இல்லை ஆனால் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.”என கூறினார்.