விமலுக்கு எதிராக சேகரிக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள புலனாய்வாளர்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த செப்டம்பர் மாதம் அனுராதபுரத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றியபோது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கின் நான்காவது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை விமர்சித்து அவர் உரையாற்றியதாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பிலேயே, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரமவினால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பணிப்புரையின் பேரில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, ஏழு தொலைக்காட்சி அலைவரிசைகளிடமிருந்து வீரவன்சவின் உரையின் திருத்தப்படாத காணொளிப் பதிவுகளை பொலிஸார் பெற்றுக்கொண்டதுடன், கூட்ட அமைப்பாளர்கள், தொகுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொலிஸார், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஒலிபெருக்கி உபகரணங்களை வழங்கிய நபரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணை அறிக்கைகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொலிஸார், 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விமல் வீரவன்சவுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஆவணங்களை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.