காபூல் விமான நிலைய தற்கொலை குண்டுதாக்குதல்! - பிரித்தானியர்களுக்கு பாதிப்பா?
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பிரித்தானியர்களுக்கு பாதிப்பு எதுவும் எற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இன்று தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. விமான நிலையத்தின் நுழைவு வாயில் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விமான நிலையத்தில் தாக்குதல் நடந்தாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னெடுக்கும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சரவையுடனான அவசர சந்திப்புக்குப் பிறகு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். முன்னதாக ஊடகங்களிடம் பேசிய போரிஸ் ஜோன்சன் சுமார் 15 ஆயிரம் பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் தரப்பில் கூறப்பட்டுள்ள போதிலும் இது குறித்து எந்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
"பிரித்தானிய குடிமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தானின் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து தமது நாட்டு படையினர் முதன்மை அக்கறை கொண்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்திற்கு உடனடி பதில் அளிப்பது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்." எனவும் அவர் கூறியுள்ளார்.