பதவி விலகுவாரா ஷம்மி சில்வா - ரசிகர்கள் கடும் ஆவேசம்
ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்து, 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது.
இந்தத் தோல்வி இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சுப்பர் 8 சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 61 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்தது.
நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணி, 107 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
சிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் ஏற்கனவே தோல்வியடைந்திருந்த இலங்கை, தற்போது மூன்றாவது தொடர் தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணியாக மாறியுள்ளது.
பதவி விலக வேண்டும்
அணி தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா உடனடியாக பதவி விலக வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் (ResignShammiSilva) வைரலாகி வருகின்றன. தோல்விகளுக்குப் பொறுப்பேற்காமல் அவர் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய தசுன் ஷானக்க, அணியைச் சூழ்ந்துள்ள எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார்: "நாங்கள் எவ்வளவுதான் நேர்மறையாக இருக்க முயன்றாலும், வெளியிலிருந்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் கிரிக்கெட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மைதானத்திற்கு வெளியே மைக் பிடித்துக்கொண்டு நிற்பவர்கள், போட்டியைப் பார்க்காமலேயே வீரர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்." என ஷானக்க தெரிவித்தார்.
வீரர்களின் மனநலத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான விளையாட்டுச் சூழலை உருவாக்கவும் அரசாங்கம் தலையிட வேண்டும் என ஷானக்க கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறான நச்சுத்தன்மையான விமர்சன கலாசாரத்தைத் தடுக்காவிட்டால், கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பது கடினம் என்றும் அவர் எச்சரித்தார்.
கொழும்பு மற்றும் கண்டி மைதானங்களுக்கு வந்து ஆதரவு வழங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஷானக்க தனது மன்னிப்பைத் தெரிவித்தார். "அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எமக்கும் இருந்தது, ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எம்மால் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறோம்," என அவர் குறிப்பிட்டார்.