இலங்கைக்கு தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க முடியாது: ஐ.ஓ.சி நிறுவனம் அறிவிப்பு
தொடர்ந்தும் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம், இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இந்தியாவின் கடன் உதவியின் கீழ் தொடர்ந்து இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் எரிபொருளை கொள்வனவு செய்ய முன்னர் எதிர்பார்த்து இருந்ததாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக வேறு விநியோகஸ்தரிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் கடன் உதவியில் கீழ் டீசலை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதால், நாட்டுக்கு தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் கையிருப்பில் இருப்பதாகவும் ஒல்கா தெரிவித்துள்ளார்.
கச்சாய் எண்ணெய் இல்லாத காரணத்தினால், சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளது எனவும் இந்திய எண்ணெய் நிறுவனம் கச்சாய் எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெயை வழங்காது என்பதால், அவற்றை வேறு தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொள்ள கூட்டுத்தாபனத்திற்கு நேரிட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.