பிரதமர் பதவியை ஏற்க போவதில்லை - மைத்திரிபால சிறிசேன
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் எதிர்பார்ப்பு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அரசாங்கத்தில் வேறு எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் தீர்வு காண முடியாத நிலையில் பதவிகளை வகிக்கும் அனைவரும் பதவி விலக வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த முடிவு
உடனடியாக அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயக விரோதமானது என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார்.