ரணிலை சிறையில் தள்ளுமா 'எயார் ரணில் ஊழல்'! அம்பலமாகிய பாரிய முறைகேடு
இலங்கையில் தற்போது எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, மூத்த துறை சார்ந்தவராக இருந்தாலும் சரி, சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை தற்போதைய சட்ட நடைமுறைகள் எடுத்துக்காட்டுகின்றன.
இது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் விதிவிலக்கல்ல என்றே கூறியாகவேண்டும்.
மற்ற ஊழல் வழக்குகளைப் போல புதைக்க அனுமதிக்க முடியாத ஒரு வழக்கில் ரணில் சிக்கியுள்ளமையும், இதனை குற்றப்புலனாய்வு துறை அலசி ஆராய்ந்து வருவதையும் காணக்கூடியதாய் உள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை
இதன்படி குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து (CID) வெளிவந்த புதிய வெளிப்பாடுகள் மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், அரசு ஆதரவுடன் இயங்கும் ரணில் விக்ரமசிங்க உலகளாவிய பயணத்தில் அசாதாரண சாதனையைப் படைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இதனை பல தென்னிலங்கை ஊடகங்கள் முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
இது “ எயார் ரணில் ஊழல்" என பெயரிடப்பட்டுள்ளது.
“ எயார் ரணில் ஊழலில் "தொடர்புடைய வழக்குகளில் குற்றவியல் வழக்குகளை உருவாக்க, விசாரணை கண்டுபிடிப்புகளுடன் இணைந்து கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் பயன்படுத்தப்படும் என்பதை சட்டமா அதிபர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ரணிலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், அவர் வழக்கம்போல, எந்த பொது அறிக்கையோ அல்லது மறுப்போ இல்லாமல் குறிப்பிடத்தக்க வகையில் அமைதியாக இருந்து வருகிறார்.
அவரது அலுவலகம் குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, பொருளாதார இராஜதந்திர காலத்தில் இலங்கைக்கு சர்வதேச ஈடுபாடு அவசியம்" என்று ஒரு பொதுவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
இதற்கமைய ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து அவரது நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 426 நபர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
2022 முதல் 2024 வரையிலான இந்த உத்தியோகபூர்வ வருகைகளுக்காக 1 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதி செலவிடப்பட்டதாக சி.ஐ.டி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், ஜனாதிபதியுடன் நான்கு வெளிநாட்டுப் பயணங்களில் 63 பேர் இணைந்தனர், இதற்கு கிட்டத்தட்ட 130 மில்லியன் செலவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 14 பயணங்களில் 252 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர், இதன் செலவு 580 மில்லியனை நெருங்குகிறது.
2024 ஆம் ஆண்டில், ஐந்து பயணங்களில் 111 பேர் கூடுதலாக அழைத்துச் செல்லப்பட்டனர், இதற்கான செலவுகள் 300 மில்லியனை நெருங்குகியுள்ளன என அறிக்கைகள் கூறுகின்றன.
வித்தியாசமான விளையாட்டு
பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தற்போதைய பிரதமர் அண்மையில் நாடாளுமன்றில் ரணிலின் குறித்த வழக்கை மேற்கோள்காட்டி எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார்.
மேலும் நாடு திவாலாகி, அனைத்து இன மக்களும் சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு மத்தியில் போராடி வரும் வேளையில், இலங்கையின் முன்னாள் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைதியாக ஒரு வித்தியாசமான 'விளையாட்டை' விளையாடியுள்ளார் என்றும் ஆளும் தரப்பின் எம்.பிக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த வெளிப்பாடுகள் இனி வெறும் கதைகளாக இல்லை. அவை இப்போது தீவிர குற்றவியல் விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்ன்றன. மேலும் நீதிமன்ற பதிவுகளில் 400 க்கும் மேற்பட்ட தொடர்புடைய விசாரணை இடம்பெற்று வருவதாகவும் சில சிங்கள ஊடகங்கள் அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு சிங்கள ஊடகம் ஒன்று பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.
"பங்கேற்கப்பட்ட வருகைகளில், அதிகாரப்பூர்வ மன்றங்களை விட அதிகமான மக்கள் இரவு உணவுகளில் கலந்து கொண்டனர்.
சில சந்தர்ப்பங்களில், திட்டமிடப்பட்ட இருதரப்பு சந்திப்புகள் எதுவும் இல்லை, வரவேற்புகள் மற்றும் புகைப்படம் எடுத்தல் மட்டுமே இருந்தன” என கூறப்பட்டுள்ளது.
எயார் ரணில் கதை
இலங்கையின் " எயார் ரணில்" கதை, நீண்டகால அரசியல் ஊழல்களையும், உயரடுக்கின் பொறுப்பின்மையையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கடந்த காலத்தின் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில், எதிர்காலத்தை நோக்கிய திசையில் உறுதியாக முன்னேற வேண்டிய சவாலை எதிர்கொள்கிறது.
பொதுமக்கள், நீதியையும் வெளிப்படைத்தன்மையையும் எதிர்பார்க்கின்றனர், ஆனால் அவர்களின் பொறுமை சோதிக்கப்படுகிறது. இந்த நெருக்கடியை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பது, நாட்டின் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கும் ஒரு வரையறுக்கும் சோதனையாக இருக்கும்.