பாரிஸில் காட்டுத்தீ: போக்குவரத்து முடக்கம்
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ, பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டுப்பகுதியில், சூடான காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப் பரவி வருகிறது.
இதுவரை 800 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவுள்ள காடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
காட்டுத்தீ
இந்த தீவிர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 400 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் குண்டு வீசும் விமானங்கள் மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து பாரிஸ் பிராந்தியத்திற்குத் தீயணைப்பு விமானங்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அசாதாரண காட்டுத்தீ காரணமாக, பிரான்சின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய ஏ6 அதிவேக நெடுஞ்சாலை பகுதியளவில் மூடப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை
மேலும், வாடோவ் போன்ற அருகிலுள்ள கிராமங்களிலிருந்து 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இத்தகைய தீவிர வெப்ப அலைகளும் காட்டுத்தீயும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.