ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகுமாறு அழைப்பு: விஜயதாச ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) வேட்பாளராக முன்னிலையாகுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் தேர்தல்களின் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் கொள்கை திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் கேள்வி முடியும். அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக தீர்வு காண முடியாது.
தலைமைத்துவ தீர்மானம்
மக்கள் ஆதரவு மற்றும் அவர்களின் அரசியல் அனுபவம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே கட்சியின் தலைமைத்துவத்துவத்துக்கு நியமிக்கப்படுகின்றனர்.
எனவே நீதிமன்றம் ஊடாக எவ்வாறான தடைகள் விதிக்கப்பட்டாலும், கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையே தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக முன்வருமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மகாநாயக்க தேரர்களிடம் இருந்தும் அழைப்பு வந்தது.
எனினும், எந்த தரப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இந்த நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தக்கூடிய ஒருவருக்கே நான் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான ஆதரவை வழங்க நான் தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |