புதையல் தோண்டிய DIGயின் மனைவிக்கு பலிபீடப் பொருட்களை வழங்கிய பொலிஸார்!
அனுராதபுரத்தில் புதையல் தோண்ட சென்ற பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவிக்கு கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்திலிருந்து தேவையான பலிபீடப் பொருட்களும், ஒரு கோழியும் வழங்கப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவிக்கு பொலிஸ் அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் இவை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதையல் தோண்டும் நடவடிக்கை
இதற்கிடையில், அவரது மனைவி புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அனுராதபுரம் பகுதியில் பிரதி பொலிஸ் மா அதிபரும் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகஸ்கடவல பகுதியில் தொல்பொருள் மதிப்புமிக்க கோயில் அமைந்துள்ள ஒரு வீட்டில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தபோது, பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட எட்டு பேர் கொண்ட குழு, கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டடுள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த புதையல் தோண்டும் நடிவடிக்கைக்கு அனுராதபுரத்தில் பால் காணிக்கை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதாக கூறி, பிரதி பொலிஸ் மா அதிபர், மேலதிகாரிகளிடம் கடந்த 13 ஆம் திகதி அனுமதி பெற்றுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பதவியேற்பு
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதவியேற்பு விழாவில், பங்கேற்க நிச்சயமாக வருவேன் என்றும் அவர் தனது மேலதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
காலை 5 மணிக்கு காணிக்கை வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டாலும், அது முடிந்து காலை 5.30 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்தாலும், குறைந்தது 3 மணி நேரத்திற்கும் மேலாகும்.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு விழா காலை 7 மணியளவில் ஆரம்பமாகியது. எனினும், காலை 7.30க்கு பொலிஸ் மா அதிபர் காவல் தலைமையகத்திற்கு வரும் போது குறித்த பிரதி பொலிஸ் மா அதிபரும் கலந்து கொண்டிருந்தார்.
ஆனால், பால் காணிக்கை செலுத்திய பிறகு, குறித்த நேரத்தில் அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு வர முடியுமா என்பது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், 14 ஆம் திகதி அதிகாலையில் அனுராதபுர பொலிஸாரால் அவரது மனைவி கைது செய்யப்பட்ட பின்னரே, அவர் பொலிஸ் மா அதிபர் கடமைப் பொறுப்பேற்கும் விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் தனது மனைவி உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்ட பிறகு, அனுராதபுர பொலிஸிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தனது மனைவியைக் காப்பாற்ற அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
