ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக விக்கிரமபாகு போர்க்கொடி!
"புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தைக் கொண்டு வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு கடுமையான அவமானமாகும்" என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையை கண்டித்து நவசமசமாஜக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவசமசமாஜக் கட்சி கண்டனம்
மேலும் அந்த அறிக்கையில்,"சில தொழில்நுட்ப உத்தரவுகளை மீறுவது பொதுப் போராட்டங்களின்போது பொதுவான நிகழ்வு ஆகும். எப்போதும் மக்கள் கைது செய்யப்படுவதில்லை. அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கைது வழக்கத்துக்கு மாறானது.
இந்த சம்பவம் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு அசாதாரண சம்பவம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். இதற்கமைய, திட்டமிட்டு காலம் கடந்து கைது செய்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான கடுமையான அவமானம் ஆகும்.
ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். போராட்ட உரிமையை மீறும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
ஜனாதிபதியின் உரை
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆகஸ்ட் 3ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், சிம்மாசன உரையின் போதே, அமைதிப் போராட்டம் மனிதனின் அடிப்படை உரிமை என்றும், அந்த உரிமையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அமைதியான போராளிகளுக்கு எந்தவிதமான பாரபட்சத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன் எனவும், அமைதியான போராளிகளை பாதுகாக்கவும் வாதிடவும் ஒரு விசேட அலுவலகத்தை நிறுவுவேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் முன்னோடியாக இருந்தவர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது" என குறிப்பிடப்பட்டுள்ளது.